Wednesday, October 31, 2007

முதல் அறிமுகம்

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே
பீடுஃ பராயி ஜானே ரே
பர்(ரு) துக் ஹே உப காரு கரே தொயி
மன்(னு) அபிமான்(னு) னா ஆனே(னு) ரே

பொருள்:
வைஷ்ணவன் எனும் ஒருவன்,
பிறர் வலி அறிபவன்,
பிறர் நலன்களுக்கு செயல்கள் செய்பவன், குறிப்பாக வருந்துமவர்க்கு
மமகரம் அஹங்காரம் தலைக்கேறான்

இது பஜன் வகையைச் சேர்ந்தது. காந்திஜிக்கு மிகவும் பிடித்தமான பஜன். ஹிந்துஸ்தானியில் "கமாஜ்" அல்லது எம் கர்நாடக இசை முறையில் பேஃஹாக் எனப்படும் ராகத்தில் பாடப்படுகின்றது. இதை இளையராஜா "ஹே ராம்" இற்காக கல்யானியில் Re-Tune செய்துள்ளார். Water திரைப்படத்திலும் ரஹ்மான் இதைக் கச்சிதமாய் கையாண்டிருக்கிறார். மொழிச் சிக்கலில் மாட்டி தவிக்கும் அன்பர்களுக்காக மேலே பொருள் தரப்பட்டுள்ளது.

பொதுவாக, மீரா பஜன்கள் உலக பிரசித்தி வாய்ந்தவை. 14 ம் 15 ம் நூற்றாண்டு காலப் பகுதியில் வாழ்ந்த இக்குயில், கிட்டத்தட்ட நமது ஆண்டாள் மாதிரியே கண்ணனைக் கணவனாக வரித்துக்கொண்டு இறுதியில் அவனிடமே சங்கமித்தார்.

ஆனால் இப்பாடல் மீரா பஜன் அல்ல. இது நரசிம்ஹ மேஹ்ரா என்பவரால் இயற்றப்படுள்ளது. மிகுதிப்பாடலிலும், நல்ல வைஷ்ணவன்(சமயம் சார்பான குறித்தலை சற்றே ஒதுக்கி வைப்போம்) ஒருவனின் சீரிய பண்புகள் குறிப்பிடப்பட்டு, அவ்வாறான பண்பாளனின் பாதங்களால் தானும் தன் சுற்றமும் ஆட்கொள்ளப்படட்டும் என முடித்திருக்கிறார்.

"சகல லோக மான் சுஹினே வந்தே" என்பது அழகான வரிகள். உலகேல்லாம் சகித்து/சுகித்து, புகழ்பவன் என்று பொருள்.

"பதம் கொண்டு நடத்தும் வாழ்க்கை மாவுத்தன் அவனுமின்றி
கதம் கொண்டு துழைக்கும் வெய்ய அங்குசம் அதுவுமின்றி
மதம் கொண்ட வேழம் போல திரிகிறேன் பண்டு நான்கு
விதம் கொண்ட மறைகள் போற்றும் அரங்கமா நகருலாவே"

இது ஆண்டாள் பாடல். இலகுவாகவே பொருள் புலப்படும் அருமையான பாடல். "ஹே ராம்" இல் மனைவியை இன வன்முறைகளில் இழந்த கமல், ஊர் (ஸ்ரீரங்கம்) திரும்பும் பொழுது பின்னணியில் பயன்படுத்தப் பட்டிருக்கும். இருவட்டுக்களில், வைஷ்ணவ ஜனதோ பாடலிலேயே, "வாரணம் ஆயிரம்" பாடலுடன் இணைக்கப்பட்டிருக்கும் (ஆண்டாள், திருமாலைக் கை பற்றுவதாக கனவு காண்பதாக படுவார், அம்மி மிதித்தல் முதல் கொண்டு வர்ணிக்கும் அவர் ஏனோ தாலி கட்டுவதை மட்டும் கூறவில்லை!!!) .

நாயன்மார்களும் ஆழ்வார்களும் அடிக்கடி இங்கே, இனி வரும் பதிவுகளில் தரிசனம் தரலாம்.

ஓர் இனிய அறிமுகத்துடம் இதை ஆரம்பிப்பதே உசிதம் என எண்ணியதாலேயே இப்பதிவு.

தொடர்ந்தும் சந்திப்போம், சிந்திப்போம்.