
இதற்கிடையில் கமல் சமீபத்தில் எழுதிய கவிதை ஒன்று...
மனித வணக்கம்
தாயே, என் தாயே!
நான்உரித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே
என் மனையாளின்
மானசீக சக்களத்தி, சரண்.
தகப்பா, ஒ தகப்பா!
நீ, என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்
பொழிப்புரை நான் சொல்கிறேன்.
தமையா, ஒ தமையா!
என் தகப்பன் சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு.
தமைக்காய், ஓ தமைக்காய்!
தோழி, தொலைந்தே போனையே
துணை தேடிப் போனாயோ
மனைவி, ஓ காதலி!
நீ தாண்டப் படி எல்லாம்
நான் தாண்டக்குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும் வரை
மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறுபிறப்பே
மரண சௌகர்யமே, வாழ்!
மகளே, ஓ மகளே!
நீயும் என் காதலியே
எனதம்மை போல
எனைப் பிரிந்து நீயின்பம் காண்பாயா?
இல்லை
காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?
நண்பா, ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விடமே.
பகைவா, ஓ பகைவா!
உன் ஆடை எனும் அகந்தையுடன்
எனதம்மணத்தை கேலி செய்வாய்
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மனத்தின் விளம்பரங்கள்
மதமொன்றும், குலமொன்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகி விடும்
நிர்வாணமே தங்கும்
வாசகா, ஓ வாசகா!
என் சமகால சகவாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத்தோன்றின்
பிழை திருத்து.
எனது கவி உனது தான்.
ஆம்.
நாளை உன் வரியில் நான் தெரிவேன்